INO வின் நோக்கம் என்ன?

இந்திய நியுட்ரினோ ஆய்வுக்கூடம் (INO) நியூட்ரினோ எனப்படும் துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு மெகா-அறிவியல் திட்டமாகும். நியூட்ரினோக்கள் இயற்கையாகவே சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் காற்று மண்டலத்தில் உற்பத்தி ஆகின்றன. நியூட்ரினோக்களை ஆரம்பத்தில் எடையற்ற துகள்கள் என கருதப்பட்டன ஆனால் சமீபத்திய பரிசோதனைகள் நியூட்ரினோ வகை மாறல் (Neutrino Oscillations) மூலம் அதற்கு எடை உள்ளது என்று நிரூபிக்கப்பட்டது.

எடையுள்ள நியூட்ரினோவைப் பற்றி பல கேள்விகள் உள்ளன. நியூட்ரினோ அதன் சொந்த எதிர்த் துகளா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இக்கேள்விகளுக்கு பதிலளிக்க நியூட்ரினோ துறை இப்போது தீர்க்கமான மற்றும் துல்லியமான சோதனைகள் செய்யும் கட்டத்திற்கு செல்கிறது. இந்திய நியுட்ரினோ ஆய்வுக்கூடம் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

நம் மாணவர்கள் உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி செய்ய வசதியை உருவாக்குவதே எங்கள் நோக்கம். காற்று மண்டலத்திலிருந்து வரும் மற்ற துகள்களிலிருந்து நியூட்ரினோக்களை கண்டறிவது மிகவும் கடினம் எனவே நியூட்ரினோ ஆராய்சிக் கூடம் மலையின்னுள்ளே வைக்க வேண்டும். மிகச் செங்குத்தான உயரத்தைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள், நெடுநாள் பயன்படுத்தக்கூடிய, பாதுக்காப்பான, பெரிய பாதாள குகையை அமைக்க, உகந்த, நிலையான பாறைகளைக் கொண்டுள்ளதால், இத்திட்டம் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் ஊராட்சி புதுக்கோட்டை கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலுள்ள மேற்கு போடி மலைகளில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. ஒரு மலையினுள்ளே எல்லாத் திசையிலும் சுமார் 1 கிலோ மீட்டர் அளவுக்கு பாறை சூழ்ந்த இடத்தில், உணர்கருவியும் மற்றும் கட்டுப்பாடு கருவியும் வைக்க இரண்டு குகைகள் அமைக்கப்படும். இக்குகைகளை அடைய சுமார் 2 கி மீ நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படும். மலைஅடிவாரத்திலிருந்து அமைக்கபடும் இச்சுரங்கப்பாதயைத்தவிர மலையின் மேலேயோ அல்லது வேறெங்கும் மலையில் இடையூறு இருக்காது. மலையின் வெளியே ஒரு ஆய்வுக்கூடமும், விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இதைத் தவிர நியுட்ரினோ சார்ந்த மற்ற ஆராய்ச்சியும் இங்கு நடைபெறும்.

விழிப்புணர்வு

சமுதாயத்தில் தன் பொறுப்பை உணர்ந்து, INO குழு தொடர்ந்து அறிவியல் விழிப்புணர்வு கூட்டங்கள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கின்றது . கிராமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் குழு மும்முரமாக உள்ளது.